மதுரை: சர்வதேச பெண்கள் நாள் 2021 முன்னிட்டு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 'பெண்களின் உடல்நலத்தை மேம்படுத்துதல்: சவால்கள், சிகிச்சை மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் வராமல் தடுத்தல்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் முதுநிலை வல்லுநர் மற்றும் தலைவரான எஸ். பத்மா மற்றும் குடல், இரைப்பை அறுவை சிகிச்சை வல்லுநர் பி.எல். அழகம்மை ஆகியோர் உரையாற்றினர்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் முதுநிலை வல்லுநர் எஸ். பத்மா, "பெரும்பாலான இந்தியப் பெண்களும், குழந்தைகளும் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் அல்லது வைட்டமின் பி12 ஆகியவை அவர்களது உணவில் போதுமான அளவு இல்லாதது ரத்தசோகைக்கான பொதுக் காரணமாக இருக்கிறது.
கர்ப்ப காலத்தில் ரத்தசோகை என்பது, முதல் மற்றும் மூன்றாம் ட்ரைமெஸ்டர்களில் 11.0/g/dl-க்கு குறைவாகவும், இரண்டாவது ட்ரைமெஸ்டரில் 10.5 g/dl-க்கும் குறைவாகவும் ஹீமோகுளோபின் அளவு கர்ப்பிணிகளிடம் இருப்பதைக் குறிக்கிறது.
கர்ப்பிணி அல்லாதவர்கள், கர்ப்பிணிகளைப் பொறுத்தவரை முறையே 12 g/dl, 11g/dl என்பதற்கும் குறைவாக ஹீமோகுளோபின் அளவு இருப்பது அவர்களுக்கு ரத்தசோகை இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
விரிவான தேசிய ஊட்டச்சத்து சர்வேயின்படி, பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளில் ஏறக்குறைய 41 விழுக்காட்டினர், பள்ளிக்குச் செல்லும் வயதுள்ள குழந்தைகளில் 24 விழுக்காட்டினர், வளரிளம் பருவத்தினரில் 28 விழுக்காட்டினர் ரத்தசோகையுடன் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள் இரும்புச்சத்து, ஃபோலிக் அமில மாத்திரைகளை வழங்குதல், சத்தான உணவு வழங்குதல், வளர் இளம் பருவத்தினருக்கு குடற்புழு நீக்க மருந்துகளை உட்கொள்வது முக்கியமானது.
பெண்களின் ரத்தசோகைக்கு முக்கியப் பங்கு வகிப்பதாக பல சமூக மற்றும் பொருளாதாரக் காரணிகள் உள்ளன. இளம்பருவத்தில் கருத்தரித்தலைத் தவிர்ப்பது, கருத்தடை முறைகளை ஊக்குவிப்பது, குறைவான இடைவெளிகளில் கருத்தரிப்பதைத் தவிர்ப்பது, 20-21 வயதுக்கு முன்பு இளவயதிலேயே திருமணம் செய்வதை தவிர்ப்பது ஆகியவை கண்டிப்பாகச் செயல்படுத்தப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.