மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்த ஜெயக்கொடி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், " கடந்த 2003ஆம் ஆண்டு எனது மூத்த மகன் முனிசு என்பவரை வி.கே.குருசாமி குடும்பத்தினர் அரசியல் விரோதமாக வெட்டி கொலைச் செய்தனர்.
மேலும், வி.கே.குருசாமி என்பவர் பணம் பலம், அரசியல் பலத்தை வைத்து எங்கள் குடும்பத்தை பல வழிகளில் தொந்தரவு செய்து வந்தார்.
இதனால், எனது பிள்ளைகள் அனைவரையும் வெளியூர் சென்று பிழைப்பை நடத்தி கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தேன்.
இருந்த போதிலும் 2016 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் எனது மகன் வெள்ளைக்காளி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இரண்டு வருடங்கள் பின்பு வெள்ளைக்காளி விடுதலைச் செய்யப்பட்டார். தற்போது அவருக்கு திருமணம் செய்து குற்றாலம் அருகே வேலை செய்து வருகிறார்.
இருந்தபோதிலும், அடிக்கடி காவல் துறையினர் மதுரை காமராஜபுரத்தில் உள்ள எனது வீட்டிற்கு வந்து எனது மகனை கேட்டு முதியவர் என்றும் பாராமல் என்னை துன்புறுத்தி வந்தனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவு நேரத்தில் 40க்கும் மேற்பட்ட காவல் துறையினர் எனது வீட்டிற்கு வந்து வீட்டில் உள்ள டிவி, பீரோ மற்றும் இதர பொருள்களைச் சேதப்படுத்தி வீட்டை சோதனை செய்தனர்.
மேலும் என்னிடம் உனது மகன் எங்கள் கையில் சிக்கினால் அவனை என்கவுன்ட்டர் செய்து விடுவோம் என மிரட்டிச் சென்றனர்.
எனவே எனது மகனை என்கவுன்ட்டர் செய்யாமல் இருக்கவும், காவல் துறையினர் மகனை துன்புறுத்தாமல் இருக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது
அப்போது, தமிழ்நாடு டிஜிபி மற்றும் தமிழ்நாடு உள்துறை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.