மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலையைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக அப்பகுதிகளில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், பிள்ளையார் கோயில், தர்ஹா உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் நடமாட்டம் அதிகம் என்பதால் அங்கு வருகின்றவர்கள் குரங்குகளுக்கு வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்டவற்றை உணவாக வழங்கி வந்தனர்.
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் வருகையின்றி குரங்குகள் உணவிற்காக தவித்துவந்தன. அதனால் குரங்குகளின் உணவுக்காக திருப்பரங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர், தன்னார்வலர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்தனர். இந்த நிலையில் கடந்த சில நாள்களாக இப்பகுதியில் குரங்குகள் தொடர்ந்து உயிரிழப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 14 குரங்குகள் உயிரிழந்துள்ளன. அவைகளின் உயிரிழப்பிற்கு உணவு இல்லாமல் இருப்பதுதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் நோய்த்தொற்று காரணமாக என விலங்கு நல ஆர்வலர்கள் சந்தேகிக்கின்றனர்.
எனவே இதுகுறித்து வனத்துறை நடவடிக்கை எடுத்து குரங்குகளை காப்பாற்ற வேண்டும், உயிரிழந்த குரங்குகளின் உடல்களை உடற்கூறாய்வு செய்து அதன் அறிக்கையையும் வெளியிட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: உணவு கிடைக்காமல் கற்களை கடித்து தின்ற குரங்கு!