மதுரை அழகுபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பன். அவரது மகன் பாலமுருகன் ஓட்டுநராக பணி புரிந்து வந்தார். கடத்தல் வழக்கில் பாலமுருகனை அவனியாபுரம் போலீசார் கைது செய்து, சட்டவிரோதமாக காவலில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த பாலமுருகன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்நிலையில், பாலமுருகனின் உடற்கூறாய்வை வீடியோவாக பதிவு செய்து, இச்சம்பவம் தொடர்பாக தலைமை குற்றவியல் நடுவர் விசாரித்து உரிய இழப்பீடு வழங்கவும், தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடக் கோரி, முத்துக்கருப்பன் வழக்கு தொடர்ந்தார். பின்னர் அந்த வழக்கை வாபஸ் பெற்றார்.
இந்நிலையில் இந்த நிகழ்வுகள் தொடர்பாக வழக்கறிஞர் ஹென்றி திபேன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நிர்வாக நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் காவல்துறையினரின் தொடர் அச்சுறுத்தல் காரணமாகவே முத்துக்கருப்பன் வழக்கை வாபஸ் பெற்றதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிப்பதாக தெரிவித்தது.
அதன் அடிப்படையில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளர் தரப்பில் பாலமுருகன் மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யவும், வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு, இதுதொடர்பாக சிபிஐ இணை இயக்குநர், மதுரை காவல் ஆணையர், அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.