நாடு முழுவதும் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பொதுமக்கள் ஊரடங்கு சட்டத்தை மீறும் செயல்களில் அவ்வப்போது ஈடுபட்டுவருகின்றனர்.
இதனைக் கட்டுப்பதும் விதமாக மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் ஊரடங்குச் சட்டத்தை மீறுபவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனையடுத்து மதுரையில் உள்ள போக்குவரத்து நெடுஞ்சாலை, தெருக்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள இரண்டாயிரத்து 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அத்தியாவசிய தேவையின்றி சாலைகளில் திரியும் பொதுமக்களை கைது செய்தும், மோட்டார் சைக்கிளில் வருபவர்களிடம் வாகனங்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மாநகரை பொறுத்தவரை நேற்று மட்டும் ஊரடங்கை மீறியதாக 457 வழக்குகள் பதிவாகிவுள்ளன. ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 22ஆம் தேதி) வரை ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக 6,311 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதுதொடர்பாக ஆறாயிரத்து 811 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து நான்காயிரத்து 679 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி காவல் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு - தொழிலதிபர்களுடன் காணொலியில் உரையாடுகிறார் முதலமைச்சர்