நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் அதே தேதியில் மதுரையில் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா நடைபெறும் என்பதால் தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் அரசியல் கட்சிகளும், மக்களும் கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், சித்திரைத் திருவிழாவிற்கு தடை விதிக்க வேண்டும் என திமுக கூட்டணியில் மதுரையில் போட்டியிடும் இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் இதுகுறித்து கூறியதாவது,
"மதுரை நாடாளுமன்ற தொகுதி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர். அதனை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரி மதுரை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளேம்.
பிங்கு சந்துரு (pingu chandru) என்கிற முகநூல் பதிவர் கடந்த வியாழன் அன்று "மதுரையில் தேர்தல் தள்ளி வைக்க தேவையில்லை, சித்திரை திருவிழாவை தள்ளி வைக்கலாம் அல்லது திருவிழாவுக்கு இந்த வருடம் தடை விதிக்கலாம், ஒரு வருடம் ஆற்றில் அழகர் இறங்கவில்லையென்றால், மதுரை ஒன்று அழிந்துவிடாது, மதுரை நாடாளுமன்ற தொகுதி கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் கூறினார் என்று பதிவிட்டார். இந்த பதிவு உண்மைக்கு புறம்பானது.
இது போன்ற கருத்து எதுவும் பதியவும் இல்லை, பேசவும் இல்லை, எழுதவும் இல்லை. இது போன்ற அவதூறு பரப்புவதான் மூலம் வெங்கடேசன் அவர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்கிறார்கள். ஆகவே சம்பத்தப்பட்ட பதிவரின் பதிவின் உண்மை தன்மையை பற்றி அறியாமல் பகிர்ந்த அந்த நபர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.