மதுரையில் கடந்த மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்றுநோய் மே, ஜூன் ஆகிய இரண்டு மாதங்களில் கடுமையாக அதிகரித்துள்ளது. ஜூன் மாத இறுதி வாரத்தில் இருந்து குறைய தொடங்கி தற்போது வரை அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை காட்டிலும் குணமடைந்து வீட்டிற்கு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நாளொன்றுக்கு சராசரியாக 3 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரம் பேர் வரை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதன் காரணமாக தற்போது தொற்று பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை நகராட்சி மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் மிகத் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று (ஆகஸ்ட் 14) புதிதாக 46 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 44 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழந்ததாக மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் அறிய முடிகிறது.
மதுரையில் இதுவரை 12 ஆயிரத்து 561 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 11 ஆயிரத்து 195 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது ஆயிரத்து 57 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 309 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பிளாஸ்மா தானம் மூலமாக ஏழு பேர் இதுவரை குணமாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.