தமிழ்நாடு பஞ்சாலை மற்றும் பொது தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் எஸ்.திவ்யராகினி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தமிழ்நாட்டில் தற்போது அனைத்து ஜவுளி மில்களில் சுமங்கலி திட்டம் அமலில் உள்ளது. இத்திட்டத்தில் வேலைக்கு சேரும் பெண்களின் சம்பளத்தில் ஒரு பகுதி பிடித்தம் செய்யப்பட்டு அவர்களின் திருமணத்தின் போது வழங்கப்படும். இந்தத் திடத்தில் அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.
பெரும்பாலான ஜவுளி மில்களில் பணி நேரம் குறித்த விதியை பின்பற்றுவதில்லை. பெண்கள் பணி நேரத்தைத் தாண்டி பணிச் செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இந்த கூடுதல் நேர பணிக்கு ஊதியம் வழங்குவதில்லை. ஜவுளி மில்களில் பெண்கள் சரியான தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்படாமல் கைதிகள் போல் நடத்தப்படுகின்றனர். சுமங்கலி திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் பெரும்பாலானோர் பதின் பருவத்தினர், திருமணமாகாதவர்கள். தற்போது வெளி மாநிலத்தவர்கள் குறிப்பாக வட மாநிலத்தவர்கள் மில் வேலைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி வேலைக்குச் சேர்கின்றனர். இவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு போலி அடையாள அட்டையை வைத்து சுலபமாக தப்பிவிடுகின்றனர்.
இதனால் தமிழ்நாடு முழுவதும் ஜவுளி மில்களில் பணிபுரியும் வெளிமாநில புலம் பெயர் தொழிலாளர்களின் நிலையையும், ஜவுளி மில்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களின் பணி சூழல் மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை மாவட்டம் தோறும் தனிப்படை அமைத்து கண்காணிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசு சார்பில் உரிய பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: வீட்டில் கறுப்புக்கொடி ஏற்றுபவர்களை காவல் துறையினர் அச்சுறுத்தக் கூடாது - உயர் நீதிமன்றம்