கரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுக்கோளுக்கிணங்க, ஏப்ரல் ஐந்தாம் தேதி பொதுமக்கள் தங்களது வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து வீட்டு வாசலில் அகல் விளக்குகளை ஏற்றியும், பட்டாசுகள் வெடித்து தங்களது ஆதரவை வழங்கினர்.
இந்நிலையில், மதுரை திருநகரை அடுத்துள்ள யோகா நகர் சிவானந்தா யோகாசன ஆய்வு மையத்தில் மாநில யோகாசன சங்க பொதுச்செயலாளர் யோகிராமலிங்கம் கரோனா வைரஸை தடுக்க ஏப்ரல் ஐந்தாம் தேதி இரவு 9 மணி முதல் 21 நாட்களுக்கு தண்ணீர் மட்டும் அருந்தி தியானம் மேற்கொண்டு வருகிறார்.
இவர், கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்கியபோதும் தியானம் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கரோனா வைரஸ் மக்களை தீண்டாமல் இருக்க, தனது 21 நாள் தியான தவவேள்வியை ஏப்ரல் 5ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 26ஆம் தேதி இரவு 9.00 மணிக்கு நிறைவு செய்கிறார்.
மக்கள் அனைவரும், அரசு அறிவித்தபடி 144 விதியை மீறாமல் தனித்திருந்து வீட்டில் தினமும் காலை, மாலை 21 நிமிடம் தியானம் செய்ய வேண்டும் என்றும், தியானத்தை காட்டிலும் சிறந்த ஆயுதம் வேறோன்றும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: எனக்கு எதுவும் தெரியாது - எனது முகநூல் ஹேக் செய்யப்பட்டுள்ளது!