மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க நபர் கட்டுமான ஒப்பந்ததாரராகப் பணிபுரிந்து வந்தார். இவர், அப்பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் சொற்பொழிவாளராகவும் பணி செய்துவந்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தாய்லாந்திலிருந்து மதுரைக்கு வந்திருந்த எட்டு பேர் கொண்ட குழுவினருடன் அவரும் உடன் சென்றுள்ளார். அவர் அந்தக்குழுவினரை அழைத்துச் சென்று மதுரை மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் வழிபாடு நடத்தியுள்ளார்.
இந்நிலையில், கடந்த மார்ச் 9ஆம் தேதி, அவர் வீட்டிற்கு எதிர்ப்புறத்திலுள்ள வீட்டுக்காரரின் இல்ல திருமணத்தில் பங்கேற்றார். தொடர்ச்சியாக பல்வேறு பள்ளிவாசல்களுக்கும் சென்றும் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு பன்றிக்காய்ச்சல்(H1N1) சோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் இல்லை என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று உள்ளதா என்பது குறித்து பரிசோதனை செய்துள்ளனர்.
அப்போது, அவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து, அவர் மதுரை இராசாசி மருத்துவமனையிலுள்ள தனிப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இத்தகவலை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது மதுரை மாநகராட்சி, சுகாதாரத் துறையினர் இணைந்து உயிரிழந்தவரின் மனைவி, அவரது மகன் ஆகியோரைத் தனிமைப்படுத்தி, அவர்களுக்கும் கரோனா தொற்று குறித்து பரிசோதனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து அப்பகுதியிலுள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகள் அடையாளம் காணப்பட்டு, அவ்வீடுகளில் உள்ளவர்கள் சுகாதாரக் குழுவினரின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி மூலமாகத் சுத்தம் செய்யப்பட்டு சுகாதாரமாகப் பேணப்பட்டுவருகிறது.
இறந்த நபருடன் நெருக்கமாகத் தொடர்பிலிருந்ததாகக் கூறப்படும், 60 பேர் தற்போது கரோனா தொற்று பரிசோதனை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக, மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து உயிரிழந்தவரும் தாய்லாந்து நாட்டினரும் சென்றுவந்த அனைத்துப் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மதுரையின் புறநகர்ப் பகுதியில் தங்கியுள்ள தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அனைவரையும் தனிமைப்படுத்தி, சுகாதாரத் துறையினர் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
கரோனா தொற்றுக்கு 54 வயது நபர் உயிரிழந்திருப்பது மதுரையில் மட்டுமின்றி தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.