மதுரை: தெற்கு ரயில்வே ஊழியர்களுக்கு இடையிலான ஹாக்கி விளையாட்டுப் போட்டி, மதுரை ரேஸ் கோர்ஸ் எம்.ஜி.ஆர் மைதானத்தில் நேற்றைய முன்தினம் (நவ.28) மற்றும் நேற்று (நவ.29) ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது.
இப்போட்டியில் சென்னை, மதுரை, சேலம், திருச்சி ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதன் முதல் போட்டியில் மதுரை - சேலம் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், மதுரை அணி 9-1 என்ற கோல் கணக்கில் சேலம் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து நடைபெற்ற 2வது போட்டியில் திருச்சி - சென்னை அணிகள் மோதின.
இதில் சென்னை அணி 6 கோல்களை அடித்து வெற்றி பெற்றது. திருச்சி 2 கோல்களை மட்டும் அடுத்து வெற்றி வாய்ப்பை இழந்தனர். இதன் மூலம் சென்னை மற்றும் மதுரை அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இப்போட்டி நேற்று (நவ.29) நடைபெற்றது.
தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய சென்னை அணி, நான்கு கோல்கள் அடித்து வெற்றி பெற்றது. இறுதி வரை போராடிய மதுரை அணி, ஒரு கோல் மட்டுமே அடித்து வெற்றி வாய்ப்பை இழந்தது. இதனையடுத்து, அபாரமாக வெற்றி பெற்ற சென்னை அணிக்கு ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா கோப்பையை வழங்கி பாராட்டினார்.
இதனை சென்னை ஹாக்கி அணியின் கேப்டன் மனோஜ் பெற்றுக் கொண்டார். ரன்னர் அணிக்கான கோப்பையை மதுரை அணி கேப்டன் சுரேஷ் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியின்போது கோட்ட ஊழியர் நல அதிகாரி டி.சங்கரன், உதவி ஊழியர் நல அதிகாரி இசக்கி, தெற்கு ரயில்வே விளையாட்டு அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பல ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் யார்? ராகுல் டிராவிட் குறித்து பிசிசிஐ முடிவு!