குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், " குமரி மாவட்டப் பகுதியில் உள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி சூழல் (பாதுகாக்கபட்ட) உணர்திறன் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
அதன் எல்லை நிர்ணயம் தொடர்பான பொது மக்கள் கருத்துகேட்பு கூட்டம் முறையாக நடத்தப்படாமல் இருந்தது. பின்னர், கரோனா நோய்த்தொற்று காலங்களில் மக்களிடம் கருத்து கேட்பதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
இருப்பினும் செய்தித்தாள்களில் அவை விளம்பரப்படுத்தப்படவில்லை. சூழல் உணர்திறன் மண்டல எல்லையை 0-3 கிலோ மீட்டர் தூரம் என நிர்ணயம் செய்வது தொடர்பாகவே இந்தக் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
ஆனால் பொதுமக்கள் தங்களது கருத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படவில்லை. இந்நிலையில் செப்டம்பர் 22ஆம் தேதி சூழல் உணர்திறன் மண்டலத்தின் எல்லையை 0 முதல் 3 கிலோமீட்டர் வரை என நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே சூழல் உணர்திறன் மண்டலத்தின் எல்லையை 0 லிருந்து 3 கிலோமீட்டர் என நிர்ணயம் செய்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு," பொதுமக்களிடம் முறையாக கருத்து கேட்பு நடத்தாமல் குமரி மாவட்ட சூழல் உணர்திறன் மண்டலத்தின் எல்லையை 0 முதல் 3 கிலோமீட்டர் என நிர்ணயம் செய்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும் கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் ஏற்கனவே இருக்கும் குவாரிகளை மூடவும், புதிதாக குவாரிகள் தொடங்க அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.
தொடர்ந்து மத்திய அரசு தங்களின் அறிவிப்புகளை வெளியிடும் போது இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமல்லாது, அப்பகுதி மக்களின் மொழியிலும் அறிவிப்பு மற்றும் அது தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: இனி BIS சான்றிதழ் பெற்ற தலைகவசங்களுக்கு மட்டுமே அனுமதி - மத்திய அரசு அறிவிப்பு