மதுரை: மனிதநேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் கலந்தர் ஆசிக் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "இராமநாதபுரத்தில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செம்படையார் குளம், பெருங்குளம் அருகில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி பயனற்ற நிலையில் உள்ளது.
இந்த சுங்கச்சாவடியானது தற்போது ஆபத்தான நிலையில் கட்டிடச் சுவர் இடிந்தும் அங்குப் பொருத்தப்பட்டு இருக்கும் இரும்பு கம்பிகள் சாய்ந்தும், வெளியே கம்பிகள் நீட்டியவாறும் இரும்பு தூண்கள் துருப்பிடித்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், பொதுமக்களும் பயணிகளும் அவ்வழியே கடந்து செல்கின்றனர்.
இந்த தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கும் புகழ்பெற்ற இராமேஸ்வரம் கோயிலுக்கும் இந்த சுங்கச்சாவடியைக் கடந்து செல்கின்றனர்.
இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இரவு நேரங்களில் மின்விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பயனற்ற சுங்கச்சாவடியின் இரும்பு தூண்களில் மோதி விபத்துக்குள்ளாகும் நிலையும் உள்ளது. பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் விபத்தை ஏற்படுத்தும் அபாய நிலையில் உள்ள இந்த சுங்கச்சாவடியை உடனடியாக அகற்றிட உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த சுங்கச்சாவடி தற்போது பயனற்ற செயல்பாட்டில் இல்லை எனவே உடனடியாக இந்த சுங்கச்சாவடி அகற்றி இரண்டு நாளுக்குள் முழுமையாக அப்புறப்படுத்தப்படும் என நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கில் அரசு தரப்பு, மனுதாரரின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுவதால் புதிதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கத் தேவை இல்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.
இதையும் படிங்க: போகி பண்டிகை; சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிவாசிகளுக்கு முக்கிய வேண்டுகோள்!