கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் கண்ணன் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்காவில் உள்ள பூலாம்வலசு கிராமத்தில் அருள்மிகு மகாமாரியம்மன், அருள்மிகு பகவதி அம்மன் மற்றும் அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில்கள் அமைந்துள்ளது.
பாரம்பரியமும், தொன்மையும் வாய்ந்த இக்கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான தை மாதத்தில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து திருவிழா நடத்துவது வழக்கம். அதேபோல் திருவிழாவில் சேவல் சண்டை நடத்துவதும் வழக்கமாக உள்ளது. அதனடிப்படையில் 08.02.2023 முதல் 11.02.2023 வரை 4 நாட்களுக்கு சேவல் சண்டை போட்டி நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளோம்.
மேலும், எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையோ, போட்டியில் பங்கேற்கும் சேவல்கள் மீது எந்தவிதமான துன்புறுத்தலோ, வன்முறையோ ஏற்படாத வகையில் முழு கிராமத்தின் சார்பாக, நாங்கள் பல ஆண்டுகளாக சேவல் சண்டை போட்டியை அமைதியான முறையில் நடத்தி வருகிறோம்.
சேவல் சண்டை போட்டி நடத்துவதற்கு அனுமதி கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் அதற்கான எந்தவித பதிலும் இல்லை. எனவே, கரூர், அரவக்குறிச்சி, பூலாம்வலசு கிராமத்தில் 08.02.2023 முதல் 11.02.2023 வரை 4 நாட்களுக்கு சேவல் சண்டை போட்டி நடத்த உரிய அனுமதி வழங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சேவல் சண்டைக்கு அனுமதி வழங்குவது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிப்ரவரி 7ஆம் தேதிக்கு முன்னதாக பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: உசிலம்பட்டியில் கிடாமுட்டு நடத்த அனுமதி கோரிய வழக்கு