மதுரை: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த வைந்தியநாதன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்து இருந்தார். அதில், "நான் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பிரசாத ஸ்டால் வைத்துள்ளேன். ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் 2024ஆம் ஆண்டு ஜூன் 30 வரை ஸ்ரீபண்டாரம், பணியாரப்போடு, சத்திரப்போடு மற்றும் பிரசாத ஸ்டால் அமைப்பதற்கான இ-டெண்டர் அறிவிப்பை கோயிலின் இணை ஆணையர் வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள தகுதியானவர் என கூறப்பட்டுள்ளது. நான் பிராமணர் (ஐயர்) சமுதாயத்தைச் சேர்ந்தவன். நான் வைஷ்ணவ சம்பிரதாயத்தை பின்பற்றாததால் என்னால் ஏலத்தில் பங்கேற்க முடியவில்லை.
எனக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது. எனவே, பிரசாத ஸ்டால் டெண்டர் தொடர்பான அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இந்த அறிவிப்பு சட்ட விரோதம் என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, “திட்டமிட்டபடி டெண்டர் நடத்தலாம். அதில் மனுதாரரும் பங்கேற்கலாம். ஆனால், டெண்டரை இறுதி செய்யக் கூடாது” என உத்தரவிட்டு விசாரணையை செப் 27ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.