தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் லெனின். இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "நான் ‘பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம்’ இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பு செயலராக இருந்து வருகிறேன். எங்கள் அமைப்பு மூலம் விவசாயிகளுக்கு கல்வி கற்பித்து, இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு செய்து வருகிறோம்.
தஞ்சாவூர் டெல்டா பகுதியில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் வாயு எடுப்பதற்காக அரசு திட்டமிட்டு வருகிறது. இதனால் விவசாயம் முற்றிலுமாக அழியும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வருகிற ஜூன் 12ஆம் தேதி அன்று, காஞ்சிபுரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை, மனித சங்கிலி போராட்டம் நடத்துவதற்காக தமிழ்நாடு காவல் துறை தலைவரிடம் மனு அளித்தும் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.
எனவே இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "நாளை மனித சங்கிலி நிகழ்வு நடைபெறுவதாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சுமார் 600 கிலோ மீட்டர் தூரம் என்பதால், போதிய பாதுகாப்பு வழங்க இயலாத நிலை உள்ளது” என வாதங்களை முன்வைத்தார். அதைத்தொடர்ந்து நீதிபதி மனுதாரரிடம், வேறொரு தேதியில் மனித சங்கிலியை நடத்தலாமே என கேள்வி எழுப்ப, அதற்கு மனுதாரர் தரப்பில் ஜூன் 23ஆம் தேதி அன்று நிகழ்வை நடத்த அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து நீதிபதி, மனுதாரர், ஜூன் 14ஆம் தேதி சட்ட ஒழுங்கு கூடுதல் காவல் துறைத் தலைவரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும், 23ஆம் தேதி மனித சங்கிலி நடத்த 18ஆம் தேதிக்குள் உரிய நிபந்தனையுடன் அனுமதி வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.