மதுரையைச் சேர்ந்த கணேசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில்," 1984ஆம் ஆண்டு காதி மற்றும் கிராம தொழிலாளர் வாரியத்தில் பணியில் சேர்ந்த நிலையில் 14 ஆண்டுகள் தொடர்ச்சியாக எவ்விதமான புகாருமின்றி முறையாக பணியாற்றியுள்ளேன். 1997 இல் அப்போதைய காதித்துறை அமைச்சரின் மகளின் திருமணம் தொடர்பாக சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்பட்டது.
அது தொடர்பாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியது. அந்த தகவலை நாளிதழுக்கு அளித்ததாகவும், என் மீது பலவிதமான தவறான குற்றச்சாட்டுகளையும் கூறி 1999 இல் என்னை பணியில் இருந்து நீக்கம் செய்தனர். இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த நிலையில் பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து 2000இல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து அரசு தரப்பில், தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும் தற்போதுவரை பணப்பலன்கள் எதுவும் முறையாக வழங்கப்படவில்லை. இது குறித்து நடவடிக்கை கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
காதி மற்றும் கிராம தொழிலாளர் வாரியத்தின் செயல் அலுவலர் தொடர்ச்சியாக நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இதில் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறார். ஆகவே காதி மற்றும் கிராமப்புற தொழில் வாரியத்தின் செயல் அலுவலர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சதிகுமார் சுகுமாரா குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: பகல் நேரத்தில் வெளி மாவட்ட பேருந்துகள் இயக்கம்