மதுரை, மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் தனியார் தொலைக்காட்சியில் உயர் நீதிமன்ற கிளை செய்தியாளராக பணியாற்றி வருகிறார். மகாத்மா காந்தி நகர் குடியிருப்புப் பகுதிகளில் சமூக விரோதிகள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக முன்னதாக இவருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து இது குறித்து சந்திரன் காவல் துறையினருக்கு புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா வியாபாரிகள் கடந்த 2017ஆம் ஆண்டு அவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து கஞ்சா விற்பனை நடத்தியும் வந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் காவல் துறையில் மீண்டும் புகார் அளித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா விற்பனை கும்பல், இதற்கு சந்திரன் தான் காரணம் எனக் கூறி அவரை கத்தியால் சரமாரியாகக் குத்தி தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சந்திரன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் குறித்து தல்லாகுளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நான்கு நபர்களை கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
தற்போது இருதரப்பு வாதங்களும் நடந்து முடிந்த நிலையில் நான்கு நபர்களுக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை, தலா ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.