மதுரை மாவட்டம் அரசரடியில் நடந்த விழாவில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், உலகம் மத அடிப்படையில் பிரிந்து தீவிரவாதம் மனித குலத்தையே அச்சுறுத்தும் வகையில் வளர்த்திருப்பது வருத்தமளிக்கிறது. ஆன்மீகத்தில் அரசியலை புகுத்தும் குரூர எண்ணம் படைத்த சுயநலவாதிகள், இறைத்தன்மையை தனது கருப்பொருளாக்கி ஆட்சி அதிகாரத்தை பிடிக்க பிரிவினையை ஏற்படுத்தும் காலகட்டத்தில் உள்ளோம்.
ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா வழியில் அமமுக மனிதநேயத்தை வளர்த்துவருகிறது. சிறுபான்மையினர், பெரும்பான்மையினரை வைத்து அரசியல் செய்து சிலர் லாபம் பார்க்கிறார்கள். அவர்களால் சிறுபான்மையினரை காக்கவும் முடியாது. பெரும்பான்மையினரை எதிர்க்கவும் முடியாது. தமிழ்நாட்டை பரம்பரை பரம்பரையாக ஆள வேண்டும் என்பதற்காக தமிழ், சமூகநீதி, சமத்துவம் என்ற பெயரால் நம்மிடையே பிரிவினையை உருவாக்குகிறார்கள் யார் என்பதை சிறுபான்மையினர் புரிந்துகொள்ள வேண்டும்
தேர்தல் வரும்போது மட்டும் சிறுபான்மை, பெரும்பான்மை என்பார்கள். அவர்கள் போலியானவர்கள் நம்பாதீர்கள். ஆன்மீகத்தில் உள்ளவர்கள் யாரையும் அழிக்க நினைக்கமாட்டார்கள். அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். பகவத்கீதை, பைபிள், குர்ஆனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
மனித சமூகத்தில் அன்பையும் பாசத்தையும் எடுத்துரைப்பது தான் மதம். தமிழ்நாடு என்றென்றும் அமைதிப் பூங்காவாக அமைய நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். அனைத்து சிறுபான்மையினரையும் அன்பு காட்டி அரவணைப்பதுதான் பெரும்பான்மை சமூகத்தினரின் நம்பிக்கை என்பது எம்ஜிஆர், ஜெயலலிதாவின் எண்ணம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தொழில்நுட்ப கோளறா? - மா சுப்பிரமணியன் கேள்வி