மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டி. புதுப்பட்டி காலனியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் வெங்கடேஷ் (21). கடந்த 11ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர், அதன்பின் வீடு திரும்பாததால், வெங்கடேஷின் தாயார் தனம், திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் அருண் உத்தரவின் பேரில் காணாமல் போன வெங்கடேஷை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக டி.புதுப்பட்டியைச் சேர்ந்த நான்கு பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து தனிப்படை காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மதியம் திருமங்கலம் - ராஜபாளையம் சாலையில் டி. குன்னத்தூர் அருகே சாலை ஓரத்தில் துர்நாற்றம் வீசுவதாகக் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அப்பகுதியில் சோதனையிட்டபோது அங்கு சாக்குப்பையில் பாதி எரிந்த நிலையில் ஆணின் தலை ஒன்று கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.
தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சாலையோரத்தில் கிடந்த எரிந்த தலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர்கள் அந்தத் தலையைக் கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறையினர் இறந்தது கடந்த 11ஆம் தேதி காணாமல் போன வெங்கடேஷாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஏற்கனவே பிடித்துவைத்துள்ள நான்கு பேரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
![Burnt human head, எரிந்த ஆண் தலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5819393_mdu.jpg)
இந்நிலையில், வெங்கடேஷ் காணாமல் போனது குறித்து அவரது தாய் தனம் தெரிவிக்கையில், அருகிலுள்ள பந்தல் அமைப்பாளர் முத்துப்பாண்டியிடம் வெங்கடேஷ் பந்தல் அமைக்கும் வேலை செய்துவந்தார். இதனிடையே கடந்த 11ஆம் தேதி ஊரில் நடக்கும் திருவிழாவிற்காக பந்தல் வேலைக்குச் சென்ற வெங்கடேஷ் மாலை 5 மணியளவில் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்ததார். அப்போது முத்துப்பாண்டி, அவரது நண்பர் ரமேஷ் என்பவரும் வெங்கடேசை அழைத்துச் சென்றனர். அதன்பின் எனது மகன் இதுவரை வீடு திரும்பவில்லை எனத் தெரிவித்தார்.
பாதி எரிந்த நிலையில் சாலை ஓரத்தில் ஆண் தலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.