மதுரை மீனாட்சி மகளிர் கலைக்கல்லூரி பின்புறம் உள்ள பந்தல்குடி கால்வாயில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”செல்லூர் பந்தல்குடி வாய்க்காலில் இருந்து பெருமளவிலான கழிவுநீர் வைகை ஆற்றில் கலக்கிறது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உடன் இணைந்து இந்தக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு ஆறு சுத்திகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. கழிவுகள் அகற்றப்பட்டு சுத்திகரிக்கப்படும் தண்ணீர், பூங்காக்கள் மற்றும் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு மீதமுள்ள தண்ணீர் வைகை ஆற்றில் கலந்துவிடப்படும். 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர் பராமரிப்புக்காக மதுரை மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து 65 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையை சுற்றியுள்ள 33 ஊரணிகளில் 13 ஊரணிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு வாய்ப்பாக அமையும்.
16 ஊரணிகளில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதம் 6 ஊரணிகளில் பணிகள் விரைவில் தொடங்கப்படும். மாரியம்மன் கோயில் தெப்பக்குளம், தல்லாகுளத்தில் உள்ள திருமுக்குளம், டவுன் ஹால் ரோடு தெப்பகுளம் ஆகியவை தற்போது மாநகராட்சியால் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
மதுரை மாநகருக்குள் மட்டும் தற்போது 412 ஆழ்துளைக் கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் மழைநீர் சேகரிப்பு மாற்றம் செய்யப்பட மதுரை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மதுரை மாநகராட்சியில் உள்ள 100 ஆண்டுகளுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் கிடைப்பதற்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,” தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு பணிகளை பாராட்ட மனமின்றி எதிர்க்கட்சித் தலைவர் முக.ஸ்டாலின் தொடர்ந்து புகார் செய்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் மிக அபாரமான வளர்ச்சியை பெற்றுள்ளது. கரோனா காலத்திலும்கூட தமிழ்நாடு அமைச்சர்கள் மக்கள் பணியை தொடர்ந்து ஆற்றி வந்தது எல்லோருக்கும் தெரியும்.
அதிமுகவை பொறுத்தவரை எந்த கட்சிக்கும் சார்பான அணியும் கிடையாது. அங்கு பிணியும் கிடையாது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி பெற்று தமிழ்நாடு ஆட்சியை மூன்றாவது முறையாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமையும். அதற்குரிய பணிகளை தொடர்ந்து அதிமுக செய்து வருகிறது” என்றார்.
இதையும் படிங்க:ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாய் சீரமைப்பு