கரோனா அச்சுறுத்தலால் தமிழ்நாடு முழுவதும் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து அத்தியாவசிய தேவைகள் இன்றி இருசக்கர வாகனத்தில் வீதிகளில் உலா வருவதையும் கட்டுப்படுத்த மாவட்டங்கள் முழுவதும் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 144 தடை உத்தரவைப் பின்பற்றாமல் தேவையின்றி வெளியில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடமிருந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது. அதன்படி நேற்றைய தினம் மதுரை பேரையூர் பகுதியில் 144 தடை உத்தரவை மீறும் வகையில் சாலைகளில் சுற்றித்திரிந்த 175 இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர அத்தியாவசிய பொருள்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்ற உத்தரவை மீறி செயல்படும் கடைகள், பெட்டிக் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட 10 கடைகளுக்கு துணைக் கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் சீல் வைக்கப்பட்டது.