சில ஆண்டுகளாகவே, உலகின் வெப்பநிலை வினாடிக்கு வினாடி அதிகரித்துவருவதாக பருவநிலை நிபுணர்கள் கூறிவருகின்றனர். இம்மாற்றத்திற்கு மனிதனின் செயல்பாடுகளும் முக்கிய காரணியாக அமைகிறதென்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சூழலின் தன்மையை உணராமல், நாகரிக மாற்றத்தின் பெயரில் தன் சூழலையும், இயற்கையையும், நடைமுறை யதார்த்தங்களையும் மனிதன் மாற்றிக்கொண்டே வருகிறான். நடைமுறை சூழலுக்கேற்ப மனிதன் தன்னை உருமாற்றிக்கொள்வதாகக் கூறினாலும், இயற்கை கட்டமைப்பையும் தன்னோடு சேர்த்து உருமாற்றம் செய்கிறான் என்பதை ஏனோ அவன் அறிவதேயில்லை.
இப்பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினமும், இயற்கைச் சூழலின் தட்பவெப்ப நிலைக்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும். ஆனால், மனிதன் உலகமயமாக்கல் கொள்கையில் தன்னை மறந்தபோது தகவமைத்தல் என்பது தாவுதலாகிவிட்டது.
தனது சூழலுக்கு ஒவ்வாத பலவற்றை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியதே பருவநிலை மாற்றத்திற்கான காரணிகளில் முக்கியமான ஒன்று. ஒரு படைப்பு மற்றொரு படைப்பை அழித்துவிட்டே இந்த உலகை எட்டிப்பார்க்கிறது. அப்படி அழிக்கப்படும் படைப்புகள் பெரும்பாலும் இயற்கையைச் சார்ந்தவையாக இருப்பது வேதனையான ஒன்று.
உலகமயமாக்கல் வரலாம், தொழில் மயமாக்கல் வரலாம், ஏன் மனித வேலைப்பளுவை குறைக்கும் இயந்திர மயமாக்கலும் வரலாம். இதனை மனிதர்கள் தங்களின் முன்னேற்றத்திற்கான பொருளாகக் கூட கருதலாம். ஆனால், அவையனைத்தும் இயற்கையை சிதைக்காமல் இருக்கும்வரை மட்டுமே.
மேற்கூறிய வளர்ச்சிகள் அனைத்தும் நமது நாட்டில் இயற்கை வனப்புகளை அழித்தே நடத்தப்படுகின்றன. வளர்ச்சிகள் நம் நாட்டில் வனங்களை சுருக்கிவிட்டன. அதில் கட்டப்படும் கட்டடங்களிலும், சூழலினை சமன்படுத்த மரங்கள் இல்லாமல் குரோட்டான்களாகவே குடியேறுகின்றன. பூமியின் மீது தன் வலுவான கரங்களை நீட்டிப் பரப்ப ஏதுவான மரங்கள் நடப்படுவது வெகுவாக குறைந்துள்ளது.
தற்போது, தன்னார்வலர்களின் முயற்சியில் மரக்கன்றுகளும் விதைப்பந்துகளும் மக்களின் மத்தியில் பிரசித்திப் பெற்றிருந்தாலும், இதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும் இந்த வேலையிலும் எங்கோவொரு மரம் கட்டுமான பணிகளுக்காகவும், சாலை விரிவாக்கத்திற்காகவும், மனிதனின் லாபத்திற்காகவும் வெட்டப்பட்டிருக்கலாம்.
இந்த நவீன காலத்தில் ஒரு பொருளின் அத்தியாவசியத்தைவிட, அப்பொருளுக்கான அடையாளமோ, சந்தைப்படுத்தப்படுதலோ முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அப்படியிருப்பின், இந்தியா தனது தேசிய மரமாக ஆலமரத்தினை அங்கீகரித்து ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் வனங்களையும், அவற்றை சார்ந்த உயிரிகளையும் காப்பது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே உள்ளதா என்பது கேள்விக்குறியே.
இந்தியாவில் மழைப்பொழிவை ஊக்குவிக்கும் மரங்களில் முக்கியமானது ஆலமரம். இது, இலைகளின் மூலம் அதிகப்படியான நீராவியாதலை நிகழ்த்தி மழைப்பொழிவை அதிகரிக்கிறது.
அதுமட்டுமின்றி, வேரின் மூலம் காற்றிலுள்ள ஈரப்பதத்தை சேமித்து கூடுதலான நீரினை பூமிக்கடியில் செலுத்துகிறது. அடர்ந்து-படர்ந்து-விரிந்து சுற்றுச்சூழலை சீராக்கி மனிதனுக்கு சுத்தமான பிராண வாயுவை அளிக்கிறது.
ஆலமரத்தின் தாயகமும் இந்தியாதான். எனவே, இம்மரம் இங்குள்ள சூழலுக்கு தக்கவாறே தன்னை வடிவமைத்துக்கொண்டிருக்கும். எனினும், புவிப்பரப்பில் அதிகளவு வேரூன்றி பரவும் காரணத்திற்காகவே இவை வீடுகளில் வளர்க்கப்படாமல் இருக்கின்றன. நீர்நிலைகளும் குடியேற்றங்களாக மாறிவிட்டதால் அப்பகுதிகளிலும் அவற்றிற்கான சூழல் அமைவதுமில்லை.
மரத்தின் தன்மையறிந்தும், மண்ணின் தேவையுணர்ந்தும் விவசாயம் செய்த தலைமுறையை கடந்து வந்ததால், இவற்றின் தேவைகளை உணராமலேயே இத்தனை ஆண்டுகளை கடந்துவந்துள்ளோம்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் செல்லூர் அருகேயுள்ள மீனாட்சிபுரத்தில் உள்ள மக்கள் தங்கள் பகுதியிலுள்ள நூறு ஆண்டுகள் கடந்த ஆலமரத்திற்கு இன்று நூற்றாண்டு விழா கொண்டாட சில ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
அம்மாவட்டத்தின் நீர்நிலை பாதுகாப்பு இயக்கம், சமூக செயற்பாட்டாளர்கள், மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மரங்களின் தேவை மற்றும் பாதுகாப்பினை உணர்ந்து தற்போது செயல்படத் தொடங்கியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
மேலும், இந்த நூற்றாண்டு விழா குறித்து பேசிய நீர்நிலை பாதுகாப்பு இயக்க செயலாளர் சுந்தர பாண்டியன், இந்த ஆலமரம் எங்களுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய உதவுவதுடன், நூறு ஆண்டுகளுக்கு மேலாகவுள்ளதால், இந்தப்பகுதியின் அடையாளமாகவே மாறிவிட்டது.
இப்பகுதியின் பேருந்து நிறுத்தமே ஆலமரத்தின் பெயரைக்கொண்டுதான் அடையாளப்படுத்தப்படுகிறது என்கிறார். ஏழு மரங்கள் இருந்த இப்பகுதியில் தற்போது இரண்டு மரங்களே உள்ளதென்றும், அவற்றை பாதுகாக்க ஆவன செய்வோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
அப்பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் துரை விஜயபாண்டியன், நமது வருங்கால தலைமுறைகளுக்கு இயற்கையை விட்டுவிட்டுச் செல்ல வேண்டுமே தவிர வெட்டிவிட்டுச் செல்லக் கூடாது. மரத்தின் பட்டைகள் கூட நமக்கு ஏதாவதொரு வகையில் பயன்படக் கூடியவைதான். ஒரு மரம் என்பது பல்வேறு உயிர்களின் வாழிடம். அவற்றை காப்பது அனைவரின் கடமை என்கிறார்.
எங்கள் பகுதிக்கான அடையாளமாகத் திகழும் இந்த ஆலமரத்திற்கு விழா எடுப்பது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியளிப்பதோடு மட்டுமல்லாமல், மக்கள் அனைவரும் கூடும் சுப நிகழ்ச்சியாக அமையும் என முகம் முழுக்க புன்னகை பூக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
மரங்களின் தேவையை உணராத, அதன் பயன்களை அறியாத மக்களுக்கு மத்தியில், மீனாட்சிபுரம் பகுதி மக்களால் இன்று ஆலமரங்களுக்கு நடத்தப்படும் நூற்றாண்டு விழா மக்கள் மத்தியில் மரங்கள் வளர்ப்பது குறித்த விழிப்புணர்விற்கான ஒரு தூண்டுகோலாக அமையட்டும்.