தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிவரும் மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த டாக்டர் டி.ஜி. வினய் சேலம் மாவட்ட பட்டுப்புழு வளர்ப்பு துறையின் இயக்குநராக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றிவந்த அன்பழகன் ஐஏஎஸ் மதுரை மாவட்ட ஆட்சியராக இன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
அன்பழகன், 2011ஆம் ஆண்டிற்கான இந்திய ஆட்சிப்பணி பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2001ஆம் ஆண்டு நடத்தப்பட்ட துணை ஆட்சியர் தேர்வில் முதலிடம் பெற்றார்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றியவர். அதை தொடர்ந்து சென்னை மாவட்ட வருவாய் ஆட்சியராகவும் பணியாற்றினார். இவர் சுதந்திர இந்தியாவின் 75ஆவது மாவட்ட ஆட்சியராகவும் உள்ளார்.
மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 2010ஆம் ஆண்டு மதிவாணன் ஐஏஎஸ் ஆட்சியராகப் பொறுப்பேற்றது முதல் தற்போது பொறுப்பேற்றுள்ள டி அன்பழகன் ஐஏஎஸ்வரை கடந்த பத்து ஆண்டுகளில் 14 மாவட்ட ஆட்சியர்களை மதுரை மாவட்டம் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது