கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேடு பகுதியைச் சேர்ந்த சேரன் மாநகர் பகுதியில் பிரதீப் சிங் என்ற பெயரில் இலங்கை தாதா அங்கொட லொக்கா வசித்து வந்தார். இலங்கையிலிருந்து தப்பி வந்து போலியான அடையாளத்துடன் கோவையில் வசித்து வந்த நிலையில், மாரடைப்பால் ஜூலை 3ஆம் தேதி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். இறந்தவரின் உடல் மதுரையில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் தொடர்புடையை, அங்கொட லொக்காவின் காதலி அமானி தான்ஜி, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, திருப்பூரைச் சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இவ்வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணையில், அங்கொட லொக்கா மதுரையில் தனது மூக்கை சர்ஜரி செய்தது உள்ளிட்ட பல தகவல்கள் வெளிவந்தன.
இந்நிலையில், சிபிசிஐடி அங்கொட லொக்கா குறித்து மேலும் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில், மதுரையில் தங்கியிருந்த வீடுகளில் ஆயுதம் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் எந்த ஆயுதமும் சிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, அங்கொட லொக்காவின் நண்பர் ஒருவர் மதுரையில் தலைமறைவாகியுள்ளதாக வந்த தகவலையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரையில் கரோனா நோயாளிகளுக்கு சுகாதாரமான உணவு வழங்கப்படுகிறதா?