மதுரை: இயற்கை வாழ்வியல், தற்சார்பு வேளாண்மை என படித்த இளைஞர்களின் கவனம் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், பொறியியல் படித்துவிட்டு தனது பாரம்பரியத் தொழிலான நெசவுத்தொழிலை கசடறக் கற்று, தனக்கான வாழ்வியல் இதுதான் எனத் தீர்மானம் செய்துவிட்டு சேவை மனப்பாங்கோடு களம் இறங்கியுள்ளார் இளைஞர் சரவணன்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே 'பொதிகை சோலை' என்னும் கூட்டுறவு அமைப்பில் இணைந்து நெசவுத்தொழிலை செய்து வருகிறார். பல்வேறு தரப்பட்ட இளைஞர்களுக்கும் இத்தொழிலைக் கற்றுத் தருகிறார். திண்டுக்கல் மாவட்டம் பழனியை சொந்த ஊராக கொண்ட சரவணன், பள்ளிப்படிப்பை முடித்த கையோடு காஞ்சிபுரத்தில் மின்னணு தகவல் தொடர்பில் பொறியியல் படிப்பை நிறைவு செய்துள்ளார்.
கிடைத்த வாய்ப்பு: பல்வேறு ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றினாலும் அவருக்கு எதுவுமே மனநிறைவைத் தராத நிலையில், தனது குடும்பத்தின் பாரம்பரிய தொழிலான நெசவைக் கற்றுக் கொள்ள தீர்மானித்து, கர்நாடக மாநிலத்தின் மாண்டியாவிலுள்ள மேல்கோட்டை கிராமத்தில் அமைந்திருக்கும் ஜனபதாகாதி என்ற அமைப்பில் இணைந்து நெசவைக் கற்றுத் திரும்பியுள்ளார்.
சரவணன் கூறுகையில், “பொதிகை சோலை அமைப்பின் நிறுவனர் பாமயன் வாய்ப்பளித்ததால், தற்போது இங்கேயே தறி போட்டு, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியிலிருந்து துணிகளை நெய்து தருகிறேன். மேலும் ஆர்வத்துடன் வருகின்ற இளைஞர்களுக்கு நெசவுத்தொழிலைக் கற்றுத் தருகிறேன். தற்போது என்னிடம் கேரள மாநில இளைஞர்கள் கற்றுக் கொள்கின்றனர்” என்கிறார்.
இயற்கை விவசாயம்: பொதிகை சோலை அமைப்பின் சார்பாக 100-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒருங்கிணைந்து கூட்டுப்பண்ணைய முறையில் இங்கே இயற்கை விவசாயத்தை மேற்கொள்கின்றனர். ஆகையால் இங்கு விளைவிக்கப்படும் பருத்தியை திரித்து, நூலாக்கி, அந்நூலை நூலாடையாக்கி, இங்கேயே விற்பனைக்கும் வைத்துள்ளனர். வெளி இடங்களுக்கு தேவையைப் பொறுத்து ஆடை, துண்டு, பை, கைக்குட்டைகள் தயாரித்து வழங்கி வருகின்றனர்.
சரவணன் மேலும் கூறுகையில், “நெசவை வெறும் தொழிலாக மட்டும் பார்க்கவில்லை. இதனை வாழ்வியலாகவே நான் உணர்கின்றேன். இயற்கை சார்ந்த விவசாயத்தை நோக்கி இளைஞர்கள் வரத் தொடங்கியிருந்தாலும், மரபு தொழிலான நெசவை நோக்கி இளைஞர்களின் வருகை குறைவாகவே உள்ளது. இதில் என்னுடைய பங்கை அதிகப்படுத்துவதே எனது நோக்கம்” என்கிறார்.
அரசு உதவ வேண்டும்: தொடர்ந்து கூறுகையில், “இயந்திரத்தில் உருவான ஆடைகளுக்கும்; கை நெசவு மூலமாக உருவான ஆடைகளுக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது. அதனைத் தொட்டுப் பார்க்கும்போதே நீங்கள் உணர முடியும். இந்தப் பருத்தி ஆடையை அணியும்போதே தங்களை மிகக் கம்பீரமாக உணர முடியும். நமது பகுதியில் நிலவுகின்ற தட்பவெப்ப நிலைக்கு நெசவில் நூற்கப்பட்ட பருத்தி ஆடைகளே மிகச் சிறந்தது. இந்த ஆடையில் சேர்க்கப்படும் வண்ணங்கள் நமது உடலுக்கும் சரி, இயற்கைக்கும் சரி மிக உகந்த ஒன்றாகும்.
தமிழ்நாடு அரசு, பனைத் தொழிலின் வளர்ச்சிக்கு உதவுவதைப் போன்று, நெசவுத் தொழிலுக்கும் உதவ வேண்டும். நிறைய இளைஞர்களை ஈர்க்கும் வகையில் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த முன் வர வேண்டும். அப்போதுதான் கை நெசவும், இயற்கை வேளாண்மையும் சிறந்து விளங்க வாய்ப்பு ஏற்படும்” என்கிறார் சரவணன்.
தற்சார்பு சார்ந்த வாழ்வியலை நோக்கி நமது இளைஞர்களின் கவனம் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், பொறியியல் பட்டதாரி சரவணன் போன்ற இளைஞர்களை தமிழ்நாடு அரசு ஊக்குவித்தால், எதிர்காலத்தில் நெசவுத் தொழில் மிகப் பெரும் வேலைவாய்ப்பையும், பொருளாதாரத்தையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
இதையும் படிங்க: தேசிய யோகா சாம்பியன்ஷிப்பில் சாதனை படைத்த நரிக்குறவ மாணவர்கள்..!