மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியிலுள்ள கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் இன்று (மே.26) ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மதுரை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மதுரை மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்தி தனி கவனம் செலுத்துமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிராமப்புற மக்களின் மருத்துவ வசதியை உறுதி செய்யும் வகையில் அம்மா மினி கிளினிக்குகளை கிராமந்தோறும் திறந்து வைத்தார். இந்த அம்மா மினி கிளினிக்குகள் கிராமப்புற மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றன.
தற்போது மதுரை மாவட்டத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா மினி கிளினிக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது மக்களின் உயிர் பிரச்னை, ஆகவே மாவட்ட நிர்வாகம் அம்மா மினி கிளினிக்குகள் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.