மதுரை: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பொய்யான வழக்குப்பதிவு செய்து, சட்டவிரோத காவலில் வைத்த காவல் துறையினர் என்னை கடுமையாக தாக்கினர். அப்போது, என்னுடைய நான்கு பற்கள் உடைக்கப்பட்டன. இதில், நான் மட்டுமின்றி விசாரணைக் கைதிகள் சிலரது பற்களை உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பிடுங்கி சித்ரவதை செய்தார்.
அதைத் தொடர்ந்து என்னை காவலர்கள் சிறையில் அடைத்தனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் மார்ச் 10ஆம் தேதி அன்று எடுக்கப்பட்ட கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை எனக்கு வழங்க வேண்டும்.
காவல் துறை அதிகாரி தாக்கியதில் பற்களை இழந்த எனக்கு எஸ்சி/எஸ்சி உட்பிரிவில் வழக்குப்பதிந்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை அதிகாரியான அமுதா மற்றும் திருநெல்வேலி உதவி ஆட்சியர் விசாரணை அறிக்கைகளை எனக்கு வழங்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி டி.நாகர்ஜூன் அமர்வில் இன்று (செப்.25) விசாரனைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீதான விசாரணையில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சி ஆதாரங்கள் இல்லை” என தெரிவித்தார்.
மேலும், “விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ்-ன் அறிக்கை தயாரிக்கும் பணி நிறைவடையவுள்ளது. குற்றப்பத்திரிக்கையும், அமுதா ஐஏஎஸ் அதிகாரியின் அறிக்கையும் நீதிமன்றத்தில் விரைவில் சமர்பிக்கப்படும்” என்றார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் மாதம் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: Actor Vishal Case: நீதிமன்றத்தை விட விஷால் பெரிய ஆள் இல்லை.. நீதிபதி காட்டம்!