மதுரை: தனியார் காப்பகத்தில் குழந்தைகள் திருட்டு எதிரொலியாக, தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து முதியோர் இல்லங்கள், மகளிர் விடுதிகள் நடத்தும் தனியார், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் விடுதிகளை ஜூலை 31-க்குள் பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து முதியோர் இல்லங்களும் (கட்டணம் / கட்டணமில்லா), தனியார், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்திடும் அனைத்து முதியோர் இல்லங்களும், முதியோர்களுக்கான குத்தகை விடுதிகள், வாடகை விடுதிகளும் 2009ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்பு, நல விதிகளில், விதி பிரிவு 12 ( 3 )-இன் கீழ் ஜூலை 31- க்குள் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
மகளிர் விடுதிகள் நடத்தும் தனியார், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் விடுதிகளை 2014ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மகளிர், குழந்தைகளுக்கான விடுதிகள், காப்பகங்கள் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தின் பிரிவுகள் 3,4 ஆகியவற்றின்படி விடுதிகள் நடத்துபவர்கள் ஜுலை 31-க்குள் உரிமம் பெற்று கட்டாய பதிவு செய்ய வேண்டும்.
மேற்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றத் தவறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், மாவட்ட சமூக நல அலுவலகத்தினை அணுகலாம் என தெரிவிக்கப்படுகிறது.