மதுரை: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று(ஜன.17) காலை 7.30 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகளைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
இந்த போட்டியில் 500 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர். 810 காளைகள் வாடி வாசலில் அவிழ்த்து விடப்பட்டது. இதில் 18 காளைகளைப் பிடித்த கருப்பாயூரணி கார்த்திக் என்ற மாடு பிடி வீரர் முதல் பரிசையும், 17 காளைகளைப் பிடித்த பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் 2-ஆம் பரிசையும் வென்றனர்.
இந்நிலையில், 2ஆம் பரிசு அபி சித்தர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முறைகேடாக முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அமைச்சர்தான் காரணம் என அபி சித்தர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "கடந்த 2023-ஆம் ஆண்டு 2-ஆவது சுற்றில் உள்ளே நுழைந்து 4 மாடுகளைப் பிடித்த போது காயம்பட்டது. இதன் பின் வெளியில் சென்று தையல் போட்டுவிட்டு மீண்டும் விளையாட வந்தேன்.
அப்போது கருப்பாயூரணி கார்த்திக் என்பவருக்கு டோக்கன் பதிவு செய்யப்படாமலேயே களத்தில் விளையாட அனுமதிக்கப்பட்டார். அதோ போல் இந்தாண்டும் டோக்கன் பதிவு செய்யாமலேயே விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் மூர்த்தி பரிந்துரையின் பேரில் கார்த்திக் இங்கே விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 2வது சுற்றில் விளையாடத் தொடங்கி 2 மற்றும் 3வது சுற்றில் 11 காளைகளைப் பிடித்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், நான் 13 காளைகளைப் பிடித்தேன். அதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. ஒரு நபருக்கு 2 சுற்றுகள் தான் அனுமதி, இதில் அதிக மாடுகளைப் பிடித்த வீரர்கள் இறுதிச்சுற்றில் அனுமதிக்கப்படுவர் என்று அமைச்சர் கூறினார்.
ஆனால், இன்று (ஜனவரி 17) கருப்பாயூரணி கார்த்திக் 5வது சுற்றில் தான் உள்ளே விளையாட வந்தார். 5, 6 மற்றும் 7வது சுற்று வரை விளையாட கார்த்திக் அனுமதிக்கப்பட்டார். ஆறு காளைகளை மட்டுமே பிடித்த கார்த்திக்குக்கு 11 மாடுகள் பிடித்ததாகக் கணக்குக் காட்டுகின்றனர். வீடியோ ஆதாரங்களோடு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பேன். எனக்கு கார் பரிசு தேவையில்லை. ஆனால், நான்தான் முதலிடம் என்பதை அறிவிக்க வேண்டும்” என்றார். இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் முதலிடம் பெற்று காரை பரிசாக வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; சிறந்த வீரருக்கான கார் பரிசை வென்ற கருப்பாயூரணி கார்த்திக்!