மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தேன். நான் தேர்வு செய்யப்படவில்லை. துணைவேந்தராக எம். கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அவருக்கு நெருக்கமான கணேஷ் ஸ்டாலின் என்பவர் தருமபுரியில் கல்வி மையம் நடத்திவந்தார். அவர் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டார். இதனால் அவரது கல்வி மையத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல் துறையினர் கணேஷ் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கணேஷ் ஸ்டாலினுக்கு சாதகமாக நான் செயல்படாததால் என் அதிகாரத்தைப் பறித்து துணைவேந்தர் பிப்ரவரி 26ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த முடிவெடுப்பதற்கு முன்பு என்னிடம் கருத்து கேட்கவில்லை.
இந்நிலையில் தொலை நிலைக்கல்வி இயக்க மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் என்னை பணியிடை நீக்கம் செய்து பல்கலைக்கழக பதிவாளர் செப்டம்பர் 23ஆம் தேதி உத்தரவிட்டார். எனது பணியிடை நீக்கத்தை ரத்து செய்து, கூடுதல் தேர்வாணையராக பணிபுரிய அனுமதிக்க வேண்டும். அதுவரை பணியிடை நீக்க உத்தரவுக்கு தடைவிதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேலுமணி, மனுதாரரை பணியிடை நீக்கம் செய்து பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: வழக்கறிஞர்களும் காவல் துறையினரும் நண்பர்களாக இருங்க! - நீதிபதி அறிவுரை