கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த நான்கு மாதங்களாக அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், படப்பிடிப்பை நிறைவுசெய்த பல்வேறு படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் பரிதவித்துவருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படம் நிறைவுற்று, கடந்த நான்கு மாதங்களாகத் திரையிட முடியாமல் இருந்தது. இதனால் சூர்யா இப்படத்தினை வருகின்ற அக்டோபர் 30ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி மூலமாக வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார்.
நடிகர் சூர்யாவின் இந்த அறிவிப்புக்கு திரைப்படத் துறையில் பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின. இந்நிலையில், மதுரையிலுள்ள அவரது ரசிகர்கள் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை திரையரங்குகளில்தான் வெளியிட வேண்டும் எனவும், ஓடிடியில் வெளியாகக்கூடாது என்றும், இந்தப் படத்திற்காக நீண்ட காலம் காத்திருக்கிறோம் எனவும், சூர்யாவின் இந்த அறிவிப்பு தங்களுக்கு ஏமாற்றத்தைத் தருகிறது எனவும் சுவரொட்டிகள் அடித்து மதுரை மாநகர் முழுவதும் ஒட்டியுள்ளனர்.
இதையும் படிங்க:'எங்கள் உழைப்பை உலக அளவில் பார்வையாளர்கள் கண்டுகளிக்க இருப்பது மகிழ்ச்சி'