மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஜோ ஆண்டிரியா இல்லத்தில் தங்கியிருக்கும் 100 குழந்தைகள் மற்றும் தனது ரசிகர்களுடன் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழாவினை நடிகர் பரோட்டா சூரி கொண்டாடினார்.
அப்போது அங்குள்ள குழந்தைகளுக்கு நோட்புக், ஸ்கூல் பேக், ஸ்கெட்ச், வாட்டர் கேன், உண்டியல் உள்ளிட்ட பல பொருட்களை வழங்கினார்.
அதன்பின்னர் அந்த குழந்தைகளுக்கு உணவு வழங்கி குழந்தைகளுடன் பேசினார். அப்போது அனைவரும் நன்றாக படித்து தங்களது வாழ்க்கையில் முன்னேற வேண்டும். கல்வி மட்டுமே நம்மிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாத ஒரு சொத்து என அறிவுரை வழங்கினார். மேலும், குழந்தைகளோடு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூரி, " வீட்டில் பொங்கல் கொண்டாடியதைவிட இந்த குழந்தைகளுடன் கொண்டாடும்போது மனம் மகிழ்ச்சியடைகிறது. எனது ரசிகர்கள் குழந்தைகளுக்கு உதவி செய்வது மிகவும் பெருமையாக உள்ளது.
ஹீரோவாக நடிப்பதற்கு எனக்கு தனிப்பட்ட ஆசைகள் எதுவும் இல்லை. நான் காமெடியனாக இருந்தே செய்ய வேண்டியவை நிறைய உள்ளன. இருப்பினும் அண்ணன் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிகராக படித்து வருகின்றேன்.
அதில் வேறு ஒரு கோணத்தில் என்னை பார்க்க வாய்ப்புள்ளது. தயாரிப்பாளர் என்பது ஒரு பெரிய கடல் அதை செய்யும் எண்ணம் தற்போது இல்லை. இப்போது மக்களின் மனநிறைவுக்கு ஏற்ற ஒரு நடிகனாக மட்டுமே இருக்க விரும்புகின்றேன்.
கரோனா காலகட்டத்தில் அனைவருமே கஷ்டத்தில் உள்ளனர். அது சினிமா துறையைச் சார்ந்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.