மதுரை: கரூரைச் சேர்ந்த சரவணன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளில் சுகாதாரமான இலவச கழிப்பறை வசதிகளை உருவாக்கித் தர வேண்டும் என சட்டம் கூறுகிறது. பெரும்பாலான இடங்களில் உள்ள கழிப்பறையில் நபர் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதுடன் கழிப்பறைகள் சுத்தமாக இருப்பதில்லை.
தமிழ்நாட்டில் காட்பாடி, அரக்கோணம் உள்பட அனைத்து ரயில் நிலையங்கள், திருச்சி பேருந்து நிலையம் என பெரும்பாலான பேருந்து நிலையங்களில் இலவச பொது கழிப்பறை வசதிகள் பல ஆண்டுகளாக சுகாதாரமாக இல்லை. டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் உயர் தரத்துடன் இலவச கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில் உள்ளாட்சிக்கு சொந்தமான கழிப்பறைகள் குறைந்த ஒப்பந்த தொகைக்கு ஏலம் விடப்படுகிறது. ஆனால் ஒரு முறை பயன்படுத்துவதற்கு அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது நகராட்சி விதிகளுக்கு எதிராக உள்ளது.
எனவே, தமிழ்நாடு முழுவதும் பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், விமான நிலையம் , கோயில் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுகாதாரமான, கட்டணமற்ற இலவச கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தர உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு ஏற்கனவே ஒத்திவைக்கப்படிருந்த நிலையில், நேற்று (ஆக.17) நீதிபதிகள் கிருபாகரன்,புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தனர். அதில்,
- தமிழ்நாடு அரசு, அதன் மக்களுக்கு தூய்மையான சுகாதாரமான கழிவறை வசதியை ஏற்படுத்தித் தருவது அவசியம்.
- வாய்ப்பிருக்கும் இடங்களில் எல்லாம் பொதுக் கழிப்பறைகளை போதுமான எண்ணிக்கையிலும், அனைத்து வசதிகளுடனும் இலவச பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- பொதுக் கழிப்பறைகள் பராமரிப்பு உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- கழிவறைகளை முறையாக பயன்படுத்துவது குறித்து, வாய்ப்பிருக்கும் இடங்களில் எல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- சுழற்சி முறையில் முறையாக தூய்மை செய்யப்பட வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க : உயர் வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு - மத்திய அரசு விளக்கமளிக்க உத்தரவு