மதுரை: தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பல்லாயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சாலை, தெருக்களைத் தூய்மையாகப் பராமரிப்பது, சாக்கடைகளில் கழிவு நீர் தடையின்றிச் செல்வதற்கான பணிகள், குப்பைகளைச் சேகரித்தல், அவற்றை முறையாக ஒழுங்குபடுத்தல் என இவர்களின் பணி வெவ்வேறு வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் மொத்தமாகத் தூய்மைப் பணியாளர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.
சில நேரங்களில் சாக்கடைகள் ஏற்படும் அடைப்புகளை அகற்றுவதற்காகக் கால்வாய்களிலோ, பாதாளச் சாக்கடைகளிலோ இறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அப்போது விஷவாயு தாக்கி இறந்துவிடுதலும், உடல் ஊனமடைதலும் ஏற்படுகின்றது. இதுபோன்ற பாதாளச் சாக்கடை மற்றும் மலக்குழி மரணங்கள் நிகழ்வது ஒவ்வோராண்டும் மிகப் பெரிய சாபக்கேடாகவே உள்ளது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை மதுரையில் மட்டும் 5 பேர் இதுபோன்ற உயிரிழப்பைச் சந்தித்துள்ளனர்.
இதுபோன்ற பாதிப்பு நிகழக்கூடிய பணியில் உள்ள தொழிலாளர்களின் பாதுகாப்புக் கருதி மத்திய, மாநில அரசுகள் சட்டமியற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் போராட்டங்கள் பல்வேறு காலகட்டங்களிலும் நடைபெற்றுத்தான் வருகின்றன. ஆனாலும் செவிசாய்ப்பாரில்லை.
கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் வழக்கறிஞர் அருட்தந்தை பிலோமின்ராஜ் கூறுகையில், “கடந்த 2013ஆம் ஆண்டு கையால் மலம் அள்ளும் தொழிலுக்குத் தடை மற்றும் மறுவாழ்வுச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்த பிறகும்கூட இந்தக் கொடுமை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர் நிகழ்வாகவே உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சற்று கூடுதலாகவே உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் ஏறக்குறைய 260க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட மேற்கண்ட சட்டம் இந்திய நாட்டில் துளி கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை. அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கு ஏற்றாற்போன்று விதிமுறைகளை வகுத்து முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற முக்கியமான கூறும் அதில் இடம் பெற்றுள்ளது. மாநில அரசுகள் இதற்கான விதிமுறைகளை இயற்றும்வரை மத்திய அரசின் சட்டமே நடைமுறையில் இருக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் துரதிருஷ்டவசமாக மாநில அரசுகள் விதிமுறைகளை வகுக்கவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரைக் கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி இந்த சட்டத்தைத் தழுவிய மிக விரிவான மாநில விதிகளை வகுத்துக் கொடுத்துள்ளது. அதை நாம் பாராட்டுகிறோம். ஆனால், தமிழ்நாட்டு அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னரும்கூட இதற்குரிய அதிகாரிகளைச் சென்றடையவில்லை என்பதுதான் வேதனை” என்கிறார்.
இதுபோன்ற தொழிலாளர்களைக் கணக்கெடுப்புச் செய்து அவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்பதும் அக்குறிப்பிட்ட சட்டத்தில் சரத்து கூறுகிறது. ஆனாலும் அதிகாரிகளுக்கு இச்சட்டம் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை என்பதுதான் கொடுமை.
மதுரை மாநகராட்சியில் பாதாளச் சாக்கடை ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றும் சரவணன் கூறுகையில், “இப்பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் கிடையாது. ஒப்பந்த முறை என்ற அடிப்படையில்தான் எங்களுக்கான பணி வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிக்கு வழங்கக்கூடிய உபகரணங்களும் போதுமானதாக இல்லை. இதற்கான கருவிகள் எல்லாம் வந்துவிட்டது என்கிறார்கள். ஆனால் நாங்கள் இன்னும் எங்களது உழைப்பை மட்டுமே நம்பியுள்ளோம். எங்களுக்குரிய மறுவாழ்வுத் திட்டங்களை மாநகராட்சியும், தமிழக அரசும் அமல்படுத்த வேண்டும்” என்கிறார் வேதனையுடன்.
மற்றொரு பணியாளர் மருதுபாண்டி கூறுகையில், “வற்புறுத்தலின் பெயரில்தான் நான் இந்தப் பணிக்குக் கொண்டு வரப்பட்டேன். இந்தப் பணிக்கு வரும்போது தொடக்கத்தில் எனக்கு அருவெறுப்பாகவே இருந்தது. நாங்கள் இந்தப் பணிகளை மேற்கொள்ளும்போது அருகிலுள்ள வீட்டுக்காரர்கள் கூட நிற்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இதிலிருந்து வெளியேறும் வாயு பாதிக்கும். என்னுடைய குடும்ப வறுமை நிலை காரணமாக இந்தப்பணிக்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டது.
மிகவும் அடிமட்டத்தில் பணியாற்றக்கூடிய வேலை இதுதான். பாதாளச் சாக்கடைப் பணியில் இறங்கும்போதெல்லாம் எனது உடலில் ஒவ்வாமை போன்று ஏற்படும். எங்கள் பணிக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதோடு, பணி பாதுகாப்பும் அரசு வழங்க வேண்டும்” என்கிறார்.
அருவெறுப்பு மிக்க இப்பணியில் நிர்ப்பந்திக்கப்படும் இந்த ஊழியர்களின் பல்லாண்டு கால வேதனை களையப்பட வேண்டுமானால், அவர்களுக்குரிய பணி பாதுகாப்பினை உறுதி செய்வதுடன் மறுவாழ்வுத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்துவதற்கும் மத்திய, மாநில அரசுகள் உடன் முனைப்புக் காட்டுவது அவசியம்.
இதையும் படிங்க: வீடுகளை விற்று சுபாஷுக்கு நன்கொடை வழங்கிய தியாகி - இலவச பட்டா கேட்டு அலையும் வாரிசு