மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா குராயூர் அருகே மாசமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து - துர்காதேவி தம்பதியினர் மகன் கதிர்வேலன் (8). இவர் அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கதிர்வேலன் காரியாபட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதையடுத்து, இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரை வேலம்மாள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமங்களில் சுகாதார வசதிகள் செய்துதர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து கள்ளிக்குடி - காரியாபட்டி சாலையில் கட்டைகளைப் போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், சம்பந்தப்பட்ட அலுவலர்களை முறையான சுகாதார வசதிகள் செய்து தரப்படும் என்று உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இதே கிராமத்தில் கடந்த ஞாயிறன்று ஆத்தாங்கரை (45) என்ற பெண் மர்ம காய்ச்சலால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. ஒரே கிராமத்தைச் சேர்ந்த பெண், சிறுவன் அடுத்தடுத்து டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மோதிரம் திருடியதால் கண்டித்த தந்தை: மனமுடைந்த மகள் தூக்கிட்டு தற்கொலை!