கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் செயல்பட்டு வரும் 12 அம்மா உணவகங்களில் உணவின்றி தவித்து வரும் ஏழை மக்களுக்கு அதிமுக சார்பில் விலையில்லா உணவு காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மதிய உணவில் கூடுதலாக முட்டை ஒன்றும் வழங்கப்பட்டு வருகிறது.
முதல்கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட கடந்த மார்ச் 23ஆம் தேதி தொடங்கி மே 18ஆம் தேதி வரை அம்மா உணவகத்தில் விலையில்லா உணவை சாப்பிட்டு 6 லட்சத்து 36 ஆயிரத்து 267 பேர் பயனடைந்துள்ளனர். ஏப்ரல் 9ஆம் தேதியிலிருந்து மே 18ஆம் தேதி வரை ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 470 முட்டைகள் விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளன.
மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 12 அம்மா உணவகங்களிலும் நாளொன்றுக்கு சராசரியாக 11074 பேர் பயனடைந்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் மொத்தம் 12 அம்மா உணவகங்களிலும் இந்த உணவு சேவையை அதிமுகவே பொறுப்பேற்று வழங்கி வருகிறது.
இதையும் படிங்க : மதுரையில் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி