ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில் மதுரை திருநகர் பகுதியில் உள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குப்பெட்டிகள் உள்ள அறையை வேட்பாளர்கள் முன்னிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் மற்றும் தேர்தல் பார்வையாளர் சுப்பையன் ஆகியோர் பார்வையிட்டனர். பிறகு வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்ட அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஆட்சியர் வினய், "மதுரை மாவட்டத்தை பொருத்தமட்டில் 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு அவற்றுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 78. 3 விழுக்காடு ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. தடுப்பு வேலிகள், கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் தயார்நிலையில் உள்ளன. வாக்கு எண்ணிக்கையில் நான்காயிரம் அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு ஏற்கனவே முறையான பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று 13 வாக்குச்சாவடி மையங்களிலும் 481 பேர் தற்போது காவல் பணியில் உள்ளனர்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வேண்டாம் என்ஆர்சி! வேண்டாம் சிஏஏ! - எதிர்க்கும் கோலங்கள்