கிருஷ்ணகிரி அருகே உள்ள மாவட்ட நீதிமன்றத்தை அடுத்துள்ள காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் டெம்போ ஓட்டுநர் மாரிமுத்து. நேற்று நள்ளிரவு எருதாட்டத்தை முடித்துவிட்டு காமராஜ் நகர் பகுதியில் உள்ள ஏரி மைதானத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.
அப்போது, மது போதையிலிருந்த மாரிமுத்துக்கும் அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த அந்நபர்கள் மாரிமுத்துவின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
ஏரி அருகே மாரிமுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக கிருஷ்ணகிரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் கொலை செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர்.
இச்சம்பவம் அறிந்து அங்கு குவிந்த அப்பகுதி மக்கள், குற்றவாளியை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல் துறையினர் பொதுமக்களை சமாதானம் செய்து, மாரிமுத்துவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரே மாதிரியான 2 கொலைகள்... கிடைத்ததோ ஒரு தடயம்! - நிகழ்த்தியதும் தனி ஒருவனே!