கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே உள்ள குமுதேப்பள்ளி பகுதியில் பிரபல தனியார் கனரக வாகன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 1,600-க்கும் மேற்பட்டோர் நிரந்தர தொழிலாளர்களாகவும், 4,000-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையிலும் வேலை செய்து வருகின்றனர்.
இந்த தொழிற்சாலை நிர்வாகம் விடுமுறை நாளான இன்று (ஜன 29) வேலை நாளாக அறிவித்துள்ளது. அதோடு விருப்பம் உள்ளவர்கள் மட்டும் வேலைக்கு வரலாம் என்று தெரிவித்துள்ளது. இதனையேற்று ஒப்பந்தம் மற்றும் தற்காலிக பணியாளர்கள் 700-க்கும் மேற்பட்டோர் வேலைக்கு சென்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிரந்தர தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் தொழிற்சங்க பொதுச் செயலாளர் சக்திவேல் தலைமையில் தொழிற்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு வேலைக்கு வந்த ஒப்பந்த தொழிலாளர்களை உள்ளே அனுமதிக்காமல், தடுத்து நிறுத்தினர்.
இதனால் அங்கு பல மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது. இதனை அறிந்த அட்கோ போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருதரப்பினர் இடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிரந்தர தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்.
அப்படி இல்லையென்றால், அந்த நாளில் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து விரைவில் முடிவு செய்வதாக தொழிற்சாலை நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்த நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் காதலால் 5 மாத கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்