கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள தேன்கனிக்கோட்டையில் நேற்று (மார்ச் 26) தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மாநிலப் பொதுச்செயலாளர் வேணுகோபால், கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் கோலப்பன் உள்பட ஏராளமான உழவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மனித-விலங்குப் பிரச்சினையைத் தீர்க்காத அரசியல் கட்சிகளுக்கு வரும் தேர்தலில் உழவர்கள் வாக்களிக்கப் போவதில்லை எனவும், உழவர்களின் குடும்பத்தினரும் நோட்டாவுக்கு வாக்களிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றினர்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் வேணுகோபால், "தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, வேலூர், கோயம்புத்தூர் நீலகிரி, ஈரோடு, திருப்பூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தேனி உள்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன.
அவ்வப்போது இவை வேளாண் நிலத்திற்குள் நுழைவதால் சேதம் ஏற்படுவது வாடிக்கையாகிவருகிறது. மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகள் மக்கள் கேட்காத பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்து வாக்குகளைச் சேகரித்துவருகின்றனர். ஆனால் உழவர்கள் நீண்டகாலமாகக் கோரிக்கைவிடுத்தும் வனவிலங்குகள் பிரச்சினையைத் தீர்க்காத காரணத்தினால் இந்தத் தேர்தலில் உழவர்கள், அவரது குடும்பத்தார் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்காமல் நோட்டாவுக்கு வாக்களிக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'தீயசக்தி திமுக இனி எந்தத் தேர்தலையும் சந்திக்க முடியாத அளவுக்கு படுதோல்வி அடையும்!'