ஓசூர் அருகேயுள்ள எடப்பள்ளி கிராமத்தில் ஸ்ரீ எல்லம்மா தேவி கோயில் அமைந்துள்ளது. இந்தக்கோயிலில் இன்று காலை வழக்கம் போல் பூஜைகள் நடைபெற்றது. அப்போது, சாமி கும்பிடுவது போல் நடித்து திடீரென பூஜை செய்யும் நேரத்தில் அம்மன் கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு இருசக்கரவாகனத்தில் தப்பியோடியுள்ளனர்.
இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை துரத்திச் சென்று பிடிக்கச் சென்றனர். எடப்பள்ளி கிராமத்தைக் கடந்து இடையநல்லூர் கிராமம் அருகே சென்ற இரண்டு திருடர்களையும் மக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனையடுத்து ஓசூர் மத்திகிரி காவல் நிலையத்தில் அவர்களை ஒப்படைத்தனர்.
காவலர்கள் அவர்கிளிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள தடிக்கல் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ்(32) என்பதும், தேன்கனிக்கோட்டை செக்போஸ்ட் பகுதியைச் சேர்ந்த செல்வா(27) என்பதும் தெரியவந்தது. இவ்விருவர்களிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் எடப்பள்ளி கிராமத்தில் ஸ்ரீஎல்லம்மா தேவி கோயில் சாமிக்கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க நகை, உண்டியல் பணம் கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சந்தேகமான முறையில் இறந்த காட்டு யானை: தந்தத்தை திருடியவர் கைது