கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் செல்லக்குமாரை ஆதரித்து, பர்கூர் திமுக ஒன்றிய கழகத்தினர் இறுதிகட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். பர்கூர் ஒன்றிய திமுக செயலாளர் கோவிந்தராசன் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று, பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சியால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையை பற்றி எடுத்துக்கூறி கை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.
இந்த இறுதிகட்ட பரப்புரையின்போது, 'காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நூறு நாள் வேலை உறுதித் திட்டம் மீண்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு முழுமையாக வழங்கிட, கை சின்னத்தில் வாக்களித்து டாக்டர் செல்லக்குமாரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுங்கள்.
மேலும் கடந்த மக்களவைத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகள் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. பல மதங்கள், இனங்கள், மொழிகள் நிறைந்த இந்திய நாட்டின் மதச்சார்பற்ற நிலைக்கு, தற்போதைய பாஜக அரசு அச்சுறுத்தலாக உள்ளது. முறையற்ற ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக, பல்வேறு தொழில்கள் மூடும் நிலை ஏற்பட்டு, தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மீண்டும் பல பொய்யான வாக்குறுதிகளை கூறி, மக்களை சந்திக்க வருகின்றனர் பாஜகவினர்.
ஆகையால், கடந்த ஐந்து ஆண்டு மத்திய அரசின் ஆட்சி மற்றும் மாநிலத்தில் நடைபெற்று வரும் அடிமை ஆட்சி குறித்து நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நாட்டின் மதசார்பின்மை காப்பாற்றப்பட காங்கிரஸ், திமுக கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும்' என அவர் கேட்டுக்கொண்டார்.