கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சமுத்து. இவருக்கு இந்திரா என்கின்ற மனைவியும் மகாலட்சுமி, அவந்திகா ஆகிய மகள்களும் மூன்று வயது பேத்தியும் உள்ளனர். இவர்கள் அம்பேத்கர் நகர் பகுதியில் தொகுப்பு வீடுகளில் வாழ்ந்து வந்தனர்.
இந்தத் தொகுப்பு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து முன்னதாக அதிலுள்ள கான்கிரீட் கம்பிகள் தெரிந்த வண்ணம் உள்ளது. மேலும் மின் விளக்குகளை கட்டுவதற்கு அந்தக் கம்பி ஏதுவாக இருந்ததால் அதில் சிறிய மின்விளக்கு கட்டி தொங்க விட்டு பயன்படுத்தி வந்தனர்.
நேற்று (ஆக.07) இரவு பெய்த மழை காரணமாக இரும்புக் கம்பிகளில் மழைநீர் கசியவே கம்பி முழுவதும் ஈரமாக இருந்திருக்கிறது. இதில் மின்கசிவு ஏற்பட்டு வீட்டின் மேற்கூரையில் உள்ள கம்பி முழுவதும் பாய்ந்துள்ளது. அந்தக் கம்பியில் இருந்து வெளியே துணி உலர்த்தும் கம்பிகளும் இணைக்கப்பட்டு கட்டப்பட்டிருந்துள்ளது.
இந்நிலையில், எதிர்பாராதவிதமாக இன்று (ஆக.08) காலை வீட்டின் முன் உள்ள கம்பியில் வழக்கம்போல் துணி காய வைக்க முயன்ற போது கம்பியில் மின்சாரம் பாய்ந்ததில் பிச்சமுத்துவின் மனைவி இந்திரா (52) மகள் மகாலட்சுமி(25), அவந்திகா (3) ஆகிய மூன்று பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சிங்காரப்பேட்டை காவல் துறையினர் அவர்களது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது!