போச்சம்பள்ளி அடுத்த வாடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினி (40). கூலி வேலை செய்து வரும் இவர், கடந்த ஜனவரி மாதம் மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது, வாடமங்கலம் கிராமத்திற்கு உறவினரின் இறப்பிற்கு வந்த பெண்மணி நாகரத்தினம் (47) என்பவர் மீது மோதியுள்ளார். இதில் நாகரத்தினத்தின் இடதுகால் எலும்பு முறிவு ஏற்பட்டதோடு, தலையில் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர், அவரது உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், சம்பவம் நடந்த அன்று நாகரத்தினத்தின் உறவினர்கள் மதுபோதையில் இருந்த ரஜினியை தாக்கியுள்ளனர். இதனால் அவருக்கு உள்காயம் ஏற்பட்டு ஏழு நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை ரஜினி அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் தாக்கப்பட்டதால்தான் தற்போது அவர் உயிரிழந்துள்ளார் என்று கருதி ரஜினியின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர், மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்று பாலத்தில், தருமபுரி - திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியலால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதனால், பேருந்துகளை காவல் துறையினர் மாற்று பாதையில் இயக்கிவிட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ரஜினியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக பர்கூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் கூறியதை அடுத்து கூட்டத்தினர் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: இரு சக்கர வாகனத்தில் கார் மோதி விபத்து - ஒருவர் பலி