கிருஷ்ணகிரி மாவட்டம் உரிகம் வனப்பகுதியில் பிலிக்கல் பீட் தாண்டவம் என்ற இடத்தில் கடந்த 16ஆம் தேதி வனத்துறையினர் ரோந்து சென்றபோது, ஆண் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்தது. இறந்த யானையின் உடலில் தந்தங்கள் மட்டும் அகற்றப்பட்டிருந்தன. இதனையடுத்து வனத்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில், மாவட்ட வனத்துறை அலுவலர் பிரபு தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், உயிரிழந்த ஆண் காட்டுயானைக்கு 20 வயதிருக்கும் என்றும், அதன் இரண்டு தந்தங்களும் திருடப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காட்டு யானை தந்தங்கள் திருடப்பட்டது தொடர்பாக உரிகம் வனச்சரக வன உயிரின குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு வனத்துறை சார்பில் மூன்று சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், ஈரணம்தொட்டி கிராமத்தில் தம்மண்ணா என்பவர் உயிரிழந்து கிடந்த காட்டுயானையின் தந்தங்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை பிடித்து விசாரித்தபோது அவர் யானை தந்தங்களை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். தம்மண்ணாவை கைது செய்த வனத்துறையினர் அவரது விவசாய நிலத்தில் மறைத்து வைத்திருந்த காட்டு யானையின் இரண்டு தந்தங்களையும் பறிமுதல் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, வனப்பகுதிக்குள் தற்காலிக வேட்டை தடுப்பு முகாம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், யானை இறந்த ஐந்து நாள்களில் குற்றவாளியை பிடித்த வனத்துறையினரை உயர் அலுவலர்கள் பாராட்டினர்.
இதையும் படிங்க: பிகார் வெள்ளம்: 7.65 லட்சம் பேர் பாதிப்பு!