கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக 60 காட்டு யானைகள் தஞ்சமடைந்து இரவு நேரங்களில் அருகிலுள்ள கிராமங்களில் நுழைந்து அங்குள்ள விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இது தொடர்கதையாக இருந்து வந்த நிலையில், நேற்று குடிசகணப்பள்ளியில் மூதாட்டி ஒருவரை யானை தாக்கி உரியிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பீதியடைய வைத்துள்ளது.
காட்டு யானைகள் தொல்லையால் அவதிப்பட்டு வந்த மக்கள் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து யானைகளை ஓரிரு நாட்களில் அடர்ந்த காட்டுக்குள் விரட்டப்படும் என வனத்துறை அலுவலர்கள் உறுதியளித்தனர்.
இதனையடுத்து, நேற்றிரவு சானமாவு வனப்பகுதியில் சுற்றித் திரிந்த 60 யானைகளை பென்னிகள், அனுமத்தபுரம், சிரிகிரிப்பள்ளி, அனுசோனை வழியாக 20 பேர் கொண்ட வன ஊழியர்கள் சுமார் 15 மணிநேரம் போராடி பட்டாசுகள் வெடித்தும், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மாரசந்திரம் வனப்பகுதிக்குள் யானைகளை விரட்டியடித்தனர். யானைகளை அடர்ந்த காட்டுக்குள் விரட்டியதால் கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.