கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த கொரட்டகிரி கிராமத்தில் உள்ள 7 கல் குவாரிகளை எதிர்த்து கிராம மக்கள் போராடி வரும் நிலையில் கடந்த 8 மாதங்களாக குவாரிகள் செயல்படாத நிலையில் 2 கல் குவாரிகள் செயல்படவும், சாலையினை மறிக்கக் கூடாது எனவும் கடந்த டிசம்பர் 9ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைப் பெற்று நேற்று கல்குவாரி கனரக லாரிகள் கொரட்டகிரி கிராமத்திற்குள் வந்தது. இந்நிலையில் வாகனங்களை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்த வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய 4 தாலூகாவைச் சேர்ந்த 60 கல்குவாரிகள், 100க்கும் மேற்பட்ட கிரஷர்களின் உரிமையாளர்கள், லாரி ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட 20,000 பேர் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவிரும்புவதாக அறிவிப்பு செய்துள்ளனர்.
குவாரிகள் கூட்டமைப்பு சங்க தலைவர் சம்பங்கி செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இந்த 4 வட்டங்களில் கல்குவாரி, கிரஷர்கள் மூலம் 20,000 பேர் வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள். கொரட்டகிரி கிராமத்தில் உள்ள குவாரிகள் செயல்படாமல் பல கோடி ரூபாய் நஷ்டமடைந்து கடன் தவணை செலுத்த முடியாத சூழலில் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அதிகாரிகள் தயக்கம் காட்டும் நிலையில், நாங்கள் இன்று முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.
இதனால் ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்டவை ஓசூர் பகுதிக்கும், கர்நாடகப் பகுதிக்கும் விநியோகிக்க மாட்டோம் என்பதால் அரசு பணிகள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் முடங்கும் அபாயம் ஏற்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'தகுதியின் அடிப்படையில் திறமையான விரிவுரையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்' - அமைச்சர் பொன்முடி