கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ரூ50 கோடி மதிப்பில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் அமைக்கப்பட்டு வரும் முதன்மை பதப்படுத்தும் நிலையத்தின் கட்டுமானப்பணிகளை அரசு தலைமைச் செயலாளர் கே. சண்முகம், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலர் ககன்தீப்சிங்பேடி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அரசுத் தலைமைச் செயலர் சண்முகம்," தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் காய்கறி பழங்கள் மற்றும் இதர அழுகும் பொருட்களுக்கான விநியோகத்தொடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் 10 மாவட்டங்களில் ரூ.480 கோடி மதிப்பீட்டில், தரம்பிரித்தல், சிப்பமிடுதல், தொடக்க நிலை குளிரூட்டுதல், மதிப்புக்கூட்டுதல், சேமிப்பு கிடங்குகள் போன்ற வசதிகளுடன் கூடிய 64 முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 136.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 இடங்களில், முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக,போச்சம்பள்ளியில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் முதன்மை பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் புளிக்காகவும், காவேரிப்பட்டிணத்தில் முள்ளங்கிக்காவும், போச்சம்பள்ளியில் மா மற்றும் பல்வகை காய்கறிகளுக்காவும், குந்தாரப்பள்ளி, ஆலப்பட்டி, காமன்தொட்டி, தட்டிகானப்பள்ளி, ஓசூர், ராயக்கோட்டை மற்றும் தேன்கனிக்கோட்டை ஆகிய ஏழு இடங்களில் பல்வகை காய்கறிகளுக்காவும் முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன " என்றார்.
இதையும் படிங்க: 'திமுக தான் எங்களுக்கு எதிரி; ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு உதிரி’ - நச் பஞ்ச் அடித்த செல்லூர் ராஜூ