கிருஷ்ணகிரி: பன்னந்ததோப்பு அருகேவுள்ள மங்கம்மாபுரத்தைச் சேர்ந்தவர் மேச்சேரி. இவரது மனைவி கூலித்தொழிலாளி பச்சியம்மாள் (22). இவரது உறவினரின் மகன் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன். நேற்று முன்தினம் (செப்.21) இரவு அவன் மதுபோதையில், பச்சியம்மாள் வீட்டிற்குச் சென்றுள்ளான்.
அங்கு, பச்சியம்மாளிடம் பீடி பற்றவைக்க தீப்பெட்டி கேட்டுள்ளான். அதற்கு பச்சியம்மாள் தீப்பெட்டி இல்லை எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து, அந்த சிறுவன் அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர், சிறிது நேரத்திற்குப் பிறகு பச்சியம்மாள் வீட்டிற்கு வந்த சிறுவன், பச்சியம்மாளை நாட்டுத் துப்பாக்கியால் அவரது இடது கை, வலது முழங்கால் உள்ளிட்ட இடங்களில் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதையடுத்து, பச்சியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், காயமடைந்த பச்சியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி டவுன் காவல்துறையினர், விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தீப்பெட்டி கொடுக்காததால் பச்சியம்மாளை சிறுவன் உரிமம் பெறாத துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக பச்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் ஜெய்கீர்த்தி சிறுவன் மீது கொலை முயற்சி, இந்திய ஆயுத சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று கைது செய்தனர்.
இதையும் படிங்க: பெண் கொலை வழக்கு: குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த காவல் துறை!